அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காத பட்சத்தில் வேறு எந்த பதவியையும் ஏற்றுக்கொள்ளாதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், புதிய அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.19ஆம் திருத்த சட்டத்திற்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இராஜாங்க அமைச்சுப்பதவியை இராதாகிருஷ்ணன் வகித்து வந்தார்.இந்நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காத பட்சத்தில் வேறு எந்த பதவியையும் ஏற்றுக்கொள்ளாதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் முடிவுசெய்துள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி அலரி மாளிகையில் இராதாகிருஷ்ணன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே அமைச்சு பதவிகளை வழங்குவதில் பிரதமர் ரணில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், இராதாகிருஷ்ணனின் இந்த முடிவு பிரதமர் ரணிலுக்கு மேலும் நெருக்கடிகளை கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.