தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.
பின், தமிழக அரசின் இத்தகைய உத்தரவை எதிர்த்து வேதாந்தா குழுமம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாமா என்பதை ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது.
கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழுவின் அறிக்கையில், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது எனவும், சில கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்” என்றும் தெரிவித்தது.
இதனையடுத்து, அகர்வாலின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி வழங்கி இறுதி தீர்ப்பை அளித்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தீர்ப்பு தமிழக மக்களை கடும் கோவத்தில் ஆழ்த்தியுள்ளது. 15 பேரின் உயிரை பலிவாங்கிய பின்பும் ஆலையை மீண்டும் திறப்பதா? என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களின் கண்டன குரலை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது எதிர்ப்பை முன்வைத்து வருகின்றனர். ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்று தகவல் வெளியாகியதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மாணவர் சங்க துணை செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட மாணவர் சங்க செயலாளர் வெற்றி, தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் சங்க துணைத் தலைவர் பிரேம்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் பகுதியில் பருவகால மாற்றத்தின் காரணமாக பூச்சி தாக்குதலால் அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.