கணவருக்காக 8 மாதங்கள் காத்திருந்த மனைவி: அடுத்தடுத்து நடந்த திடீர் திருப்பங்கள்…

மதுரை மாவட்டத்தில் கடனை திருப்பித்தராத நபரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து அதனை மறைந்துள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் சினிமாவை மிஞ்சியுள்ளது.

அபிமன்யூ – நாகேஸ்வரி ஆகிய இருவரும் அனாதை இல்லத்தில் வளர்ந்தவர்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, ஒரு வயதில் ஒரு குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தனியார் கார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த அபிமன்யூ கடந்த மார்ச் மாதம் கொடைக்கானலுக்கு சவாரி செல்வதாக தனது மனைவியுடம் கூறிவிட்டுச் சென்றார்.

சென்றவர், 8 மாதங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொலிசில் மனைவி புகார் அளித்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் 8 மாதங்கள் கழித்து குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.

சுதாகரும், அபிமன்யூவும் பள்ளியில் ஒன்றாக படித்தது மூலம் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். மேலும் சுதாகரோடு திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரும் அபிமன்யூவின் நட்பு வட்டாரத்திற்குள் வந்துள்ளார்.

இந்நிலையில், தனது உறவினரிடம் அபிமன்யூவுக்கு சுதாகர் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால் ஒரு மாதத்தில் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதாகக் கூறிய அபிமன்யூ மூன்று மாதங்களாகியும் கடனைத் திருப்பித் தராமல் இருந்துள்ளார்.

இதன்பிறகுதான் சுகாதகர் மற்றும் துரைசிங்கம் ஆகிய இருவரும் அபிமன்யூவை கொலை செய்து விட்டு காரின் பதிவு ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து பணம் பார்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கொடைக்கானலுக்கு அபிமன்யூவை சவாரிக்கு அழைத்து சென்று, மூவரும் அங்கிருந்த ஏரியின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இதில், பணப்பிரச்சனை தொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் சுதாகர், துரைசிங்கம் இருவரும் இருசக்கர வாகனத்தின் கேபிள் வயரால் அபிமன்யூவின் கழுத்தை இறுக்கித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளனர்.

பிறகு சடலத்தைக் காரில் ஏற்றிய இருவரும் மலைப்பகுதியில் 600 அடி பள்ளத்தாக்கில் சடலத்தை வீசியுள்ளனர். இதையடுத்து காரின் பதிவு எண்ணை மாற்றி விற்பனை செய்துள்ளனர்.

கணவன் அபிமன்யூவை காணாமல் பதறித் துடித்த நாகேஸ்வரிக்கு கொலையாளிகள் சுதாகரும், துரைசிங்கமும் ஆதரவாக இருப்பதுபோல் நடித்துள்ளனர்.

இவை அனைத்தும் பொலிசார் விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர். தற்போது இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் கொடைக்கானல் அருகே பெருமாள் மலையில் வீசப்பட்ட அபிமன்யூவின் சடலத்தைத் தேடி வருகின்றனர்.

குற்றவாளிகள் சிக்கினாலும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த நாகேஸ்வரி தனக்கு கணவன், தந்தை என எல்லாமுமாக இருந்த அபிமன்யூவைப் பறிகொடுத்துவிட்டு மீண்டும் குழந்தைகளுடன் அனாதையானது பலரையும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.