திமுக பிரமுகர் தொல்லை: தாய் மகள் தீக்குளிக்க முயற்சி

திமுக பிரமுகர் தங்களை பாலியல் ரீதியாக இடையூறு செய்வதாக கூறி தாய் – மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி என்ற ஆயிஷா. இவர், உமர்முக்தார் என்பவரை 2வது திருமணம் செய்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துவருகிறார். மேலும் தனது மகள் ஸ்வேதாஸ்ரீயுடன் வசித்து வரும் இவருக்கும் இவரது மகளுக்கும், அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தங்கம் என்பவரது மகன் பாலியல் ரீதியாக இடையூறு செய்வதாகவும், வெளியில் செல்லும் போது, தனது கணவரையும் தாக்க முயல்வதாகவும், தான் தனியாக இருக்கும்போது, அடிக்கடி வீட்டிற்குள் வந்து பிரச்சனை செய்வதாகவும் கூறி, திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இவரது புகார் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தொடர்ந்து இவர்கள் மீது பாலியல் தொல்லை அதிகமாகியுள்ளது. இதனால் தனது புகார் மீது நடிவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தாயும் மகளும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து புகார் தொடர்பாக விசாரிக்க தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் தாயும் மகளும் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தான் பலமுறை புகார் அளித்தும் போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தனக்கும் மகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆயிஷா தெரிவித்தார்