ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை இல்லையா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில், 2019 ஜனவரி 1 தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு ஒன்றை ஜெயலலிதா அமைத்திருந்தார். அந்த குழுவின் பரிந்துரைகளின்படி மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.

வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க, சேமித்து வைக்க மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான “பால், தயிர், எண்ணெய், மருந்து” பொருட்களுக்கான உறைகள் ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, தமிழக அரசின் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது . பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவித்தது.