கை விரிக்கும் எம்.எல்.ஏ.க்கள்! கவலையில் ஸ்டாலின்!

கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் பெற அ.தி.மு.க அரசு, மத்திய அரசுக்கு பேரழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கஜா” புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வாழ்வாதாரத்திற்கான அனைத்து உடைமைகளையும் பறிகொடுத்து கண் கலங்கி மனம் வெதும்பி நிற்கும் காவிரி டெல்டா மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அவர்களுக்குரிய நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படாமலிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிர் வாழ்வதற்காக, அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய அவல நிலைமையை அ.தி.மு.க அரசு உருவாக்கியிருப்பது வேதனையானதும், அவமானகரமானதுமாகும். நவம்பர் 15 ஆம் தேதி கோர தாண்டவமாடிய கஜா புயலுக்கு அ.தி.மு.க அரசு 19 ஆம் தேதி அறிவித்த எந்த நிவாரண உதவிகளும் விவசாயிகள், வீடிழந்தவர்கள், மீனவர்கள் என பாதிக்கப்பட்ட யாருக்கும் இதுவரை முழுமையாகப் போய்ச் சேரவில்லை.

“அமைச்சர்கள் முகாமிட்டு நிவாரணப் பணியாற்றுகிறார்கள்” என்றெல்லாம் விளம்பரத்திற்கு பேசிய முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமியின் நிர்வாகத் திறமையின்மையால் விவசாயிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே முழுநேரத் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி கண்டு கொள்ளவும் அவருக்கு நேரமில்லை என்பது வெட்கக்கேடானது.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே அரசு அதிகாரிகளிடம் முறையிட்டாலும், “எங்களுக்கு நிதி வந்தால்தானே நிவாரண உதவிகளை வழங்க முடியும்” என்று கை விரிக்கிறார்கள்.

“காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கு இந்த ஆட்சியில் போகாதது போல்” கஜா புயலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இன்னும் போய்ச் சேரவில்லை. நிவாரணப் பணிகள் நிலை குலைந்தும், நிவாரண உதவிகள் ஸ்தம்பித்தும் கிடக்கின்றன. பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பிலும் அ.தி.மு.க அரசு செய்துள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கப் போவதில்லை என்ற சந்தேகமும் மக்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

ஆகவே, கஜா புயல் பாதிப்பில் சிக்கி அவதிப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை, ஆங்காங்கே அனைத்துக்கட்சிக் குழுக்கள் அமைத்து அவர்கள் முன்னிலையில், வழங்கிடவும், அந்த மாவட்டங்களில் விவசாயக் கடன் மற்றும் கல்வி கடன்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க.விற்கு பாதுகாப்பு மதிலாக இருந்து நாடாளுமன்றத்தை முடக்குவதற்குப் பதிலாக, கஜா புயல் பாதிப்பு பேரிடர் நிதியைப் பெற உருப்படியான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் திரு பழனிசாமியும், அ.தி.மு.க எம்.பி.க்களும் எடுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.