எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விகளை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை முடிவை அறிவிக்கவுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.
நேற்று மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.
“எதிர்க்கட்சித் தலைவர் பதவி நிலை தொடர்பாக எமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைக்க விரும்புகிறேன்.
எதிர்கட்சித் தரப்பில் அதிக ஆசனத்தைக் கொண்டிருக்கும் கட்சிக்கே அப்பதவி உரியது என்பதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை.
ஆனால் இவ்விடயத்தில் வேறுஇரண்டு கேள்விகள் எழுகின்றன.
ஒன்று – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சி வரிசையில் உள்ளதா என்பது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரே இன்று அரசினதும் தலைவர். நிறைவேற்று அதிகாரத்தினதும் தலைவர். அமைச்சரவையினதும் தலைவர். அது மாத்திரமல்ல.
அவர் அமைச்சரவையில் மூன்று அமைச்சுக்களையும் தன் வசம் வைத்திருக்கின்றார்.
அப்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் அரசினதும், அமைச்சரவையினதும் தலைவராக இருந்து கொண்டு, மூன்று அமைச்சுக்களையும் தன் வசம் வைத்திருக்கையில், அதே அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சிகளின் தலைவராக இருக்க முடியாது என்பதுதான் எமது கட்சியின் நிலைப்பாடு.
அடுத்த விடயம், ஒரு கட்சியின் சார்பில் நாடாளுமன்றக்குத் தெரிவு செய்யப்படுபவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினால் அல்லது நீங்கினால் அல்லது நீக்கப்பட்டால்,அப்படி நீக்கிய நாளில் இருந்து ஒரு மாத காலத்தில் அவர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பவராவார் என்று எமது அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியிலிருந்து இன்னொரு கடசிக்கு கட்சி மாறியவர், அதனால் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையும் அதன் மூலம் அது அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்புரிமையையும் இழப்பதுடன், அதன் காரணமாக அவற்றின் மூலம் கிடைத்த நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழந்தவராகின்றார் என்ற யதார்த்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
இது புறக்கணிக்க முடியாத விடயம். ஏனெனில்இது நாடாளுமன்றத்தின் உறுப்புரிமை உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கும் அம்சம்.
இந்த அடிப்படையில் நாடாளுமன்றின் இந்த அவையில் இருப்பதற்கு தகுதியற்ற அந்நியர்கள் சிலர் இங்கு இருக்கின்றனர் என நான் நினைக்கிறேன். அத்தகையோர் சபையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
ஆனால், இந்தக் கேள்வி நிச்சயமாக விரிவாக ஆராய்ந்து உண்மை கண்டறியப்பட வேண்டும். அத்தகைய உண்மையைக்கண்டறியும் தகைமை இந்த நாடாளுமன்றுக்கு முழு அளவில்உள்ளது.
ஆகையினால் அதைக் கண்டறிவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் திட்டத்தை நாம் முன்வைக்கிறோம்.
இன்று இந்த நாடாளுமன்றத்துக்குள் தாங்களும் உறுப்பினர்கள் என்று கூறிக் கொண்டு வந்திருக்கும் சிலர், உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய உரிமையைக் கொண்டுள்ளனரா அல்லது அதை இழந்து விட்டனரா, அவர்கள் உண்மையில் இந்த சபைக்கு அந்நியரா என்று கண்டறிந்து முடிவு கட்ட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.
அத்தகைய முடிவை இந்த சபை எடுக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எந்த மாற்றத்தையும் செய்யவேண்டாம் என நான் சபாநாயகரைக் கோருகின்றேன்.
இது பதவி சம்பந்தப்பட்ட விடயமல்ல. கொள்கை அடிப்படையிலான ஒரு முக்கிய விடயம்.
நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகவும் நாம் நீதிமன்றம் சென்றோம். அதுவும் கொள்கை அடிப்படையிலான விடயம் என்பதால் தான்.
அந்த விவகாரத்தில் அரசியலமைப்பை சிறிலங்கா அதிபரே மீறினார் என்பதை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதியரசர்களும் ஒருமனதாக நிரூபித்து வெளிப்படுத்தினார்கள்.
அதுபோன்று நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தவர்கள் இன்று சபைக்குள் இருந்தால், அவர்கள் உடனடியாக சபையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
அதற்காக இந்த விடயம் பற்றி ஆராய்வதற்கு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அவசியமாகின்றது.” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, சபாநாயகர், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி வெள்ளிக்கிழமை முடிவை அறிவிப்பதாக கூறினார்.