தமிழரசுக்கட்சிக்குள் பிடுங்குப்பாடு: அபிவிருத்தி திட்டத்தை நிறுத்துவோம் என எச்சரிக்கை!

வடமாகாணசபைக்கு எதிராக பரப்புரை, குழப்பத்தில் அண்ணன்-தம்பியாக செயற்பட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோருக்கிடையில் முரண்பாடு முற்றியுள்ளது. பகிரங்கமாக மோதிக்கொள்ளும் அளவில் இந்த முரண்பாடு உச்சமடைந்துள்ளது.

இந்த மோதலால், பல உள்வீட்டு சமாச்சாரங்கள் பகிரங்கமாகி வருகின்றன.

இரண்டு தரப்பு மோதலையடுத்து, தென்மராட்சி அபிவிருத்தி திட்டங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார் ஈ.சரவணபவன். இது, தென்மராட்சி அமைப்பாளர் கே.சயந்தனை மேலும் சீண்டியுள்ளது. இதனால் மோதல் உக்கிரமடைந்து, உள்விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியாக ஆரம்பித்துள்ளன.

கொடிகாமத்தில் நான்கு வீதிகளை சரவணபவனின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது, சயந்தன் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்த முயல்கிறார், அச்சுறுத்துகிறார் என ஈ.சரவணபவனின் உதயன் பத்திரிகையில் செய்தியும் வெளியாகியுள்ளது.

கொடிகாமத்தின் குருவிச்சான் வீதி, கொலனி முதலாம் வீதி, ஒட்டங்கேணி போக்கட்டி வீதி, கொடிகாமம் கச்சாய் ஊர் எல்லைத்தெரு வீதிகளின் அபிவிருத்தியே அரசியல் சண்டையால் சிக்கலாகியுள்ளது.

இந்த வீதிகளிற்கு சரவணபவன் எம்.பியை நேரில் அழைத்துச் சென்ற பிரதேசசபை உறுப்பினருக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன்,“சரவணபவன் ஊடாக அபிவிருத்திப்பணிகளை செய்யக்கூடாது. அவ்வாறு செய்ய முற்பட்டால், எம்.ஏ.சுமந்திரன் ஊடாக கொழும்பு அரசிற்கு சொல்லி அதை நிறுத்துவேன்“ என எச்சரித்தார் என்று உதயன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தமது பததிரிகை சயந்தனை தொடர்புகொள்ள முயன்றபோது, “இந்த செய்தி பிரசுரமானால் அதன் பின்னர் நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சிக்கிளையின் செயலாளர் என்ற அடிப்படையில் உறுப்பினர்கள் கட்டுக்கோப்பாக செயற்படுவது பற்றி அறிவுறுத்தினேன். இந்த செய்தி வெளியானால் சரவணபவனிற்கு எதிராக பரப்புரை செய்வேன் என்பதையும் எழுதுங்கள்.

ஐங்கரநேசனை தெருவில் கொண்டு வந்து விட்டவன் நான். ஆளாளப்பட்ட விக்னேஸ்வரனுடன் மோத முற்பட்டவன் நான். சரவணபவனிற்கும் பாடம் படிப்பிப்பேன்“ என எச்சரித்தார் என உதயன் செய்தி வெளியிட்டுளளது.

அண்மையில் ரணில், மைத்திரியுடனான சந்திப்புக்களில் கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லையென்ற விடயத்தை செய்தியாக்கியதால், சரவணபவன் மீது கே.சயந்தன் சமூகவலைத்தளங்களிலும் பகிரங்கமாக விமர்சித்து எழுதினார். அவரை “வியாபாரி“ என்றும் குறிப்பிட்டிருந்தார்.