திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள எவரெடி பஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை பாலகிருஷ்ணன் மகள் விஜயலட்சுமி என்பவர் ஆலைக்குள் கடந்த 17.12.2018 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இது தொடர்பாக வேடசந்தூர் காவல்நிலையம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளில் தொடர்ந்து விதிமீறல்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண் தொழிலாளர்கள் மில்களில் மர்மமான முறையில் இறந்து ள்ளனர். இதுவரை காவல்துறை முறையான விசாரணை நடத்தி எந்த ஆலை நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தொழிலாளர் துறையும் எந்த தலையீடும் செய்யவில்லை.
பஞ்சாலை நிர்வாகங்களின் விதி மீறல்களுக்கு காவல்துறையும் தொழிலாளர் துறையும் பக்க துணையாக இருப்பதாக கருத வேண்டியுள்ளது. பஞ்சாலைகளில் பணிநிரந்தரம் இல்லை.
குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.421 வழங்கப்படுவதில்லை. வெளி மாவட்டங்களை சேர்ந்த இளம் பெண் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல தங்க வைக்கப்பட்டு வேலை வாங்கி உழைப்பு சுரண்டப்படுகிறது.
வறுமையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் பயன்படுத்தி தொழிலாளர் நலச் சட்டங்கள் எதையும் பஞ்சாலை முதலாளிகள் மதிப்பதில்லை. சட்ட சலுகைகள் எதையும் வழங்குவதில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளில் தொடர்ந்து பெண்கள் மரணம் அடைந்து வருகின்றனர். தற்போதும் மர்மமான முறையில் எவரெடி பஞ்சாலையில் இறந்துள்ள விஜயலட்சுமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மில் நிர்வாகம் முன்வர வேண்டும். மர்மமான முறையில் விஜயலட்சுமி மரணிப்பதற்கு காரணமான அல்லது குற்றத்தை மூடி மறைக்க முயலும் எவரெடி மில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.