செய்யாத தவறுக்கு தண்டனையா? கொந்தளிக்கும் நடிகர் விஷால்!!

தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிதி மோசடி, முறைகேடுகள் நடப்பதாக நடிகர் விஷால் மீது குற்றம் சாட்டி, நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வந்த நடிகர் விஷால் பூட்டை உடைக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசாருக்கும், நடிகர் விஷாலுக்கும் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் போலீசார், நடிகர் விஷால் உள்ளிட்டோரை கைது செய்து , பின் மாலை விடுத்துள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவிக்கையில், ”ரூ.7 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. முறைகேடாக பூட்டு போட்டவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து உள்ளேன். செய்யாத தவறுக்காக என்னை காலை முதல் பிடித்து வைத்திருந்தனர். தவறு செய்தவர்களின் மீது, நான் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள் தலையிட்டு, இங்கு பிரச்னை ஏற்படுத்துகின்றனர். நல்லது செய்வதற்குப் பெயர் முறைகேடு என்றால் அதை செய்வேன், தொடர்ந்து செய்வேன். நீதித்துறையை நான் நம்புகிறேன். நீதிமன்றம் சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தயாரிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போடப்பட்ட கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் அவர்கள் அந்த அலுவலகத்திற்கும் சீல் வைத்துள்ளார். இது குறித்து வட்டாச்சியர் தெரிவிக்கையில், ”தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.