சிறிலங்காவின் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில் இழுபறி நிலை ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களை தாமே தெரிவுசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுசெய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் நாள் இடம்பெற்ற ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் அமைச்சுக்களின் செயலாளர்கள் விடயத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னர் இருந்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பதிலாக புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனாலும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் புதிய அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கவேண்டிய கட்டாயம் காணப்படுவதால் இந்த நியமனங்கள் தொடர்பான தெரிவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தானே முடிவுசெய்ய முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள் நியமனம் ரணிலின் தெரிவாய் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் இந்த திடீர் நடவடிக்கை ரணிலுக்கு கடும் அதிர்ச்சியாய் அமைந்துள்ளதாகவும் இதனால் அடுத்துவரும் நாட்களில் புதியதொரு இழுபறி நிலை தொடரும் எனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.