யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இந்திய ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்திற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் அவர் கூறுகையில், “விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான காணிகள் அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எஞ்சி இருக்கும் 2,500 ஏக்கர் நிலம் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும்.
நல்லிணக்கத்தை பலப்படுத்த நாங்கள் எப்போதும் வேலை செய்தோம். அந்தவகையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களின் மனக்குறைகளையும், கஷ்டங்களையும் அகற்றுவதற்கு எனது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன் பிரகாரம் உள்கட்டமைப்பு வசதிகள், வீதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு விடயங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
நாட்டில் எந்தப் பகுதியையும் புறக்கணிக்காமல் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.
அந்தவகையில் வடக்கிலும் கிழக்கிலும் எமது அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் நாம் வலியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார்.
மேலும் இந்த வருடத்தின் இறுதிக்குள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிப்பேன் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.