இங்கிலாந்தை சேர்ந்த தந்தை ஒருவர், தன்னுடைய மகன் இறந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் பலருக்கும் எச்சரிக்கைக்கு விடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தை சேர்ந்தவர் டேவிட் ஹல்லி (25). இவர் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி பெவர்லினுக்கு கடந்த ஆண்டு முதல் பிரசவத்திலே கார்சன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. சில மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், மர்மமான முறையில் குழந்தை இறந்துவிட்டது.
இதுகுறித்து தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள டேவிட், என்னுடைய மனைவி கடும் சிரமத்திற்கிடையே தான் கார்சனை பெற்றெடுத்தாள்.
கார்சன் பிறந்தது முதலே எங்களுடைய குடும்பத்தில் அனைவருக்கும் ஒருவிதமான மகிழ்ச்சி பிறந்தது. ஜூலை மாதம் இரவில், நான் என்னுடைய குழந்தையை அணைத்தவாறே உறங்கிக்கொண்டிருந்தேன். காலை 5.30 மணிக்கு முனங்க ஆரம்பித்தான்.
நானும் விழித்து அவனை தூக்கிக்கொண்டு சமயலறைக்கு சென்று புட்டிபால் கொடுத்தேன். குடித்துக்கொண்டிருக்கும் போதே கையில் இருந்தப்படியே உறங்க ஆரம்பித்துவிட்டான். நானும் சாய்ந்தபடியே சோபாவில் உறங்கிவிட்டேன்.
2 மணிநேரம் கழித்து விழித்து பார்த்த போது ஏதோ தவறு நடந்திருப்பதை போல உணர்ந்தேன். என்னுடைய மகன் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தான். நான் எழுப்ப வேண்டாம் என நினைத்து சிறிது நேரம் காத்திருந்தேன். ஆனால் நேரம் ஆகியும் அவன் எழவில்லை. எனக்கு பயம் அதிகரித்தது.
உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு மாடிக்கு ஓடினேன். அவனுடைய அம்மா பெவர்லி, அழுதுகொண்டே மகனின் வாயில் வைத்து ஊதினார். ஆனால் எந்த அசைவும் தெரியவில்லை.
வேகமாக மருத்துவமனைக்கு எடுத்து சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதுகுறித்து பொலிஸாரும். மருத்துவர்களும் தீவிர விசாரணை நடத்தியும் குழந்தை இறந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
ஆனால் சோபாவில் உறங்கியதால் தான் குழந்தை இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உங்களுடைய குழந்தைகளை பெட் அல்லது சோபாவில் உறங்க வைக்காதீர்கள். அது குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என கூறியுள்ளார்.