பனிப்போருக்கு இடையில் 2வது முறையாக சந்திக்கும் டிரம்ப்- கிம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் புத்தாண்டு தொடக்கத்தில் 2வது முறையாக சந்திக்க உள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

வட கொரியா அணு ஆயுதங்களை அழிப்பதாக ஒப்புக் கொண்ட நிலையில், அந்நாட்டு அதிகாரிகள் மூன்று பேரின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கப்பட்டதாக கூறியிருந்தது.

அதனைத் தொடர்ந்து, வடகொரியா வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் இந்த தடையானது அணு ஆயுதங்களை அழிப்பதற்கான பாதைக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தது.

இதனால் இரு நாட்டிற்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ டிரம்ப்-கிம் இடையிலான இரண்டாவது சந்திப்பு புத்தாண்டில் நிச்சயம் நிகழும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘வடகொரியாவில் ஏற்பட்டிருக்கும் அணு ஆயுத அச்சுறுத்தலும் புத்தாண்டில் நிச்சயம் நீங்கும்.

சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், தற்போது வடகொரியா எந்தவொரு அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளில் ஈடுபடவில்லை. இது இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு புதிய தெம்பை அளித்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

எனினும், தென் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை வாபஸ் பெற்று தங்கள் நாட்டுக்கும் இருக்கும் அணு ஆயுத அச்சுறுத்தலை களைந்தால் மட்டுமே, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவோம்’ என வடகொரியா தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் டிரம்ப்-கிம் இடையிலான வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. அதில் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.