முழு அரசு மரியாதையுடன், பிரபஞ்சனின் உடல் தகனம்.!!

சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக நேற்று காலமானார்.

73 வயதாகும் இவர் புதுவையை சேர்ந்தவர் ஆவார். இவர் எழுதிய “வானம் வசப்படும்” என்ற வரலாற்றுப் புதினத்திற்கு,1995-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். 100க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய இவர், புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் பெற்றார். இது மட்டுமல்லாமல், தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதையும் பெற்றுள்ளார். இதுவரை 86 புத்தகங்களுக்கு மேல் இவர் எழுதி இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஓர் ஆண்டாகவே பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனில்லாமல், பிரபஞ்சன் நேற்று காலமானார். இவரது இழப்பு தமிழ் இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். ஏனெனில், தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளுமைகளில் மிக மிக முக்கியமானவர் பிரபஞ்சன்.

இந்நிலையில், இன்று தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த பிரபஞ்சனின் உடல் காலை 8 மணிக்கு புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீதி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், மாலை 4 மணியளவில் அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வம்பாகீரப்பாளையம் சன்னியாசிதோப்பில் உள்ள இடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பிரபஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.