தமிழ் திரை உலகில் டப்பிங் யூனியன் தலைவராக இருப்பவர் நடிகர் ராதாரவி. இவர் தற்போது சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் 1200 க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட, சின்னத்திரை நடிகர் சங்கத்தில், தங்களது பெயரை பதிந்து உறுப்பினர்களாக ஆனால் மட்டுமே சின்னத்திரை தொடர்களில் நடிக்க முடியும்.
அவர்கள் வாய்ப்புகள் கிடைத்த பின் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள வேண்டும். சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நடிகர் போஸ் வெங்கட் செயலாளராக உள்ள தற்போதைய இந்த சங்கத்தின் பதவிக்காலம், இந்த மாதம் இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து வரும் டிசம்பர் 25- ஆம் தேதி (நாளை), இப்போதைய நிர்வாகத்தின் கடைசிப் பொதுக்குழு கூட்டம் கூட இருக்கிறது.
அதில் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நாளை அறிவிக்க உள்ளார்கள். 2019 ஜனவரி 26-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் மொத்தம் நான்கு அணிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு அணியில் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.