திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மறைந்துவிட்ட சூழ்நிலையில் புதிய தலைவர் ஸ்டாலின் தன்னுடைய செல்வாக்கினை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, காங்கிரஸ் உடன் கூட்டணியை உறுதி செய்து கொண்டார். மேலும் இந்த விழாவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார்.
இதன் அடுத்த கட்டமாக வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் – சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24 ஆம் தேதி (இன்று) நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் – சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 24-12-2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் – சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டம் முடிந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.