தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. ஆனால் பிற்பகல் வரையிலும் மழை பெய்யவில்லை.
இந்நிலையில் இன்று (24.12.18) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியவை,
கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவிவருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சிதம்பரம், ராமநாதபுரம் அதன் சுற்று வடபகுதியில் தலா 3 செ.மீ. மழையும், ராமேஸ்வரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார் கோவில், மன்னார்குடி, சென்னை விமான நிலையம், சீர்காழி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், நெய்வேலியில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.