சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணியான பெண் விரிவுரையாளர்! கடந்தன 90 நாட்கள்…

வவுனியா – கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் ந.போதநாயகியின் 90ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த நினைவு நாள் அனுஷ்டிப்பானது வவுனியா, கற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போதநாயகியின் உருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்துடன் கற்குளம் கிராம மக்கள், போதநாயகியின் உறவுகள் உள்ளிட்டோரும் இந்த நினைவு நாள் அனுஷ்டிப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் வசித்து வந்த விரிவுரையாளர் ந.போதநாயகி விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு முச்சக்கரவண்டியில் சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இருந்து குறித்த பெண் விரிவுரையாளருடைய பை மற்றும் செருப்பு போன்ற பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதன் பின்னர் குறித்த தினத்திலேயே சங்கமித்த கடற்கரையில் இருந்து மூன்று மாத கர்ப்பிணியான விரிவுரையாளர் ந.போதநாயகியின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றதுடன், போதநாயகி நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மயூரதன் தெரிவித்திருந்தார்.

போதநாயகியின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா என்பது தொடர்பில் சிக்கல் நிலவி வந்த நிலையில் தனது மகளை, அவரது கணவரான செந்தூரன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தி வந்ததாக போதநாயகியின் தாயார் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் வவுனியாவில் போதநாயகியின் 90ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.