சிறிலங்காவுக்கான உதவிகளை 92 வீதத்தினால் குறைக்கும் திட்டத்துக்கு அமெரிக்காவின் செனெட் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை 92 வீதத்தினால் குறைக்கும் யோசனையை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், செனெட் உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
சிறிலங்காவின் பூகோள முக்கியத்துவம் கருதி, இந்த நிதிக்குறைப்பு யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிதி ஒதுக்கீட்டுக்கான செனெட் குழு அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு 43 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு பிரேரணை நேற்று செனெட் நிதி ஒதுக்கீட்டுக்கான குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
35 மில்லியன் டொலர் பொருளாதார உதவி நிதியையும், 6.8 மில்லியன் டொலர் பெருக்கமல்லாத மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நிதியையும், 5 இலட்சம் டொலர் வெளிநாட்டு இராணுவ நிதியையும், இராணுவத்தினருக்கான பயிற்சிக்கு, 5 இலட்சம் டொலரையும் உள்ளடக்கியதாக இந்த நிதி உதவி யோசனை அமைந்திருந்தது.
சிறிலங்காவில் மேலதிக ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் முயற்சிகளை அங்கீகரித்த செனெட் குழு, நீதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையும் ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி ஒதுக்கீட்டு சட்டத்தை செனெட்டின் நிதி ஒதுக்கீட்டு குழு அங்கீகரித்துள்ள போதும், சிறிலங்காவுக்கான நிதிஒதுக்கீடு தொடர்பான யோசனையை ஒத்திவைத்துள்ளது.
சிறிலங்காவுக்கான நிதி பெருமளவில் வெட்டப்பட்டுள்ளது குறித்து கடந்தவாரம், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.