தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியில் வசித்து வருபவர் சத்தேனா. இவரது மகள் அனுராதா.அவர் அதே கிராமத்தில் வசித்து வந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் அனுராதாவின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் அனுராதாவும் லட்சுமணும் வீட்டை விட்டு வெளியேறி ஹைதராபாத்திற்கு சென்று, அங்கு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பிய தம்பதியினர் லட்சுமணன் வீட்டில் தங்கியிருந்தனர். இதை அறிந்த அனுராதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூட்டமாக சென்று லட்சுமணன் மற்றும் அவரது உறவினர்களைத் தாக்கி விட்டு அனுராதாவைக் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அனுராதாவை பக்கத்து ஊருக்கு கடத்திச் சென்ற அவர்கள் கொலை செய்து, அவரது உடலை எரித்து அதன் சாம்பலை ஆற்றில் கரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து லட்சுமணன் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக சத்தேனா மற்றும் உறவினர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்று தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சத்தேனாவையும் அவரது உறவினர்கள் சிலரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.