இது கதையல்ல! உண்மை நிகழ்ச்சி…!
பிரான்ஸ் நாட்டில் மேரி ஆன் என்ற பெண் வாழ்ந்து வந்தார். வசதியில் பெரிய கோடீஸ்வரி அந்தப் பெண்! ஆனால், விதி வசத்தால், அவருக்கு, திடீரென்று இதய நோய் ஏற்பட்டது.
பணம் இருக்கிறதே, என்று அவரும், பல உயர் ரக சிகிச்சைகளை மேற் கொண்டார். உலகின் பல பிரபலமான மருத்துவமனைகளிலும், சென்று பார்த்தாகி விட்டது. பலன் ஒன்றும் இல்லை. இதய நோய், அதிகரிக்கத் துவங்கியது.
அது 1894-ஆம் வருடம்! அவரது நோயைக் கண்ட பலரும் அவருக்கு ஆறுதல் கூறினார்களே ஒழிய, அதைத் தீர்ப்பதற்கான வழியைச் சொல்லவில்லை. தன் குறையை, தேவாலயத்தில் உள்ள தேவனிடம் தெரிவித்து அழுதார். அப்போது, அங்கிருந்த பாதிரியார், துாய இருதயருக்கு ஒரு ஆலயம் எழுப்புங்கள், உங்கள் நோய் குணமாகும், என்றார்.
இதே சமயம், தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தில், வசித்து வந்த, பெர்டினன்ட் சென்ஸ் அந்த ஊரில் இருந்த சிற்றாலயத்தில், பாதிரியாராக இருந்தார்.
அந்த ஆலயத்தினை விரிவு படுத்திக் கட்ட வேண்டும், என்று தன் சொந்த நாடான பிரான்சிற்குச் சென்றார். மேரி ஆன், அவரை, பிரான்ஸ் தேவாலயத்தில் சந்தித்தார். ஆலயம் கட்டும் எண்ணம், அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் தோன்றியது தான் அதிசயம்!
மேரி ஆன், இடைக்காட்டூரில், தேவாலயம் கட்ட பண உதவி செய்தார். அது மட்டுமல்ல. அந்த ஆலயத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் பிரான்ஸ் நாட்டிலிருந்தே அனுப்பி வைத்தார்.
அப்படி உருவானது தான், தற்போது இடைக்காட்டூரில் உள்ள இருதயநாதர் ஆலயம். இந்தக் கோயில் கட்டி முடித்ததும் இன்னொரு அதிசயம் நடைபெற்றது. மேரி ஆன்னின் இதய நோய் முற்றிலும் குணமாகியது.
இதய நோயைப் போக்க வல்லவர், என்பதை உணர்த்தும் வகையில், இங்குள்ள இயேசு, தன் இருதயத்தை திறந்து காட்டுவது போல், சிலை அமைத்திருக்கிறார்கள். பிரான்சில் உள்ள, ரீம்ஸ் கதீட்ரல் ஆலயம் போல, பிரான்ஸ் கட்டிடக் கலையில், இன்றும் ஜொலிக்கிறது, இந்த ஆலயம்!
மதுரை ராஜா