புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் என்ற இளைஞரும், ஆலங்குடியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற இளைஞரும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில்நேற்று ஆலங்குடி பள்ளிவாசல் அருகே கட்டுமானம் நடைபெறும் கட்டிடத்தில் இருவரும் இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்துல் ரகுமானுக்கு போதை தலைக்கேறியதும் அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து சரம்வாரியாக சிவசுப்பிரமணியன் முகத்திலும் தலையிலும் தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் சிவசுப்பிரமணியன் தலையிலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அப்பகுதியில் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீடுகளில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்குடியில் தற்போது இளைஞர்கள், மது, கஞ்சா, புகைப்பழக்கம் என பல போதை பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளனர். அப்பகுதிகளில் 24 மணி நேரமும் மதுக்கடை பார்கள் திறந்திருப்பதால் பலரும் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். பொதுமக்கள் மதுவை ஒழிக்க எவ்வளவு போராடினாலும் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை.
ஆலங்குடி பகுதிகளில் மக்கள் நடமாடும் இடங்களில் சாதாரணமாக கஞ்சா விற்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காவல்துறையினர் சட்டவிரோதமாக செயல்படும் மதுவிற்பனையையும், போதை பொருட்கள் விற்கப்படுவதையும் தடுக்காவிட்டால் இப்பகுதிகளில் கொலை கொள்ளை சம்பவம் அதிகரிக்க கூடும் என கூறுகின்றனர்.