கடந்த சில நாட்களாகவே அமமுக-வை பற்றி தொடர்ந்து வதந்திகள், பொய்யான செய்திகள் என வந்துகொண்டிருந்தது. மேலும் தினகரன் அதிமுகவோடு இணைகிறார். திமுகவோடு இணைகிறார். கட்சி காலியாகிறது என்று கண்டமேனிக்கு செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக பேட்டியளித்துள்ளார். அதில், ”அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் அதிமுக உடன் இணையாது, அது தற்கொலை செய்யும் முயற்சியாக இருக்கும். அமமுகவின் வளர்ச்சியை பிடிக்காமல் அதிமுக – அமமுக இணைய உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், ”முக ஸ்டாலின் பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில், பிரதமராக ராகுலை முன்மொழிந்தாரோ என சந்தேகம் இருக்கிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழக்க காரணம் திமுக தான்.தமிழக நலனை பாதுகாக்க, இங்குள்ள மாநிலகட்சிகள் வலுவானால்தான் முடியும். ஒருசில மாநிலக்கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன். கூட்டணி அமைப்பேன்” என்றும் தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து சில நாட்களாக தினகரன் பற்றி பொய்யான வதந்திகளை பரப்பி, அவரின் வளர்ச்சியை தடுக்க நினைத்தவர்களுக்கு இந்த பேட்டியின் மூலம் நல்ல பதிலடி கொடுத்துள்ளார். இந்த பேட்டிக்கு பிறகு அமமுக தொண்டர்கள் மேலும் உற்சாகத்துடன் செயல்பட தொடங்கியுள்ளார்கள்.
இந்நிலையில், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கோட்டையான கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், அருமனை அருகே நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக துணைப் பொதுச்செயாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியபோது, ”நம் தமிழகத்தில் மதங்களின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்துபவர்களை புறக்கணிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்திய நாட்டின் சிறப்பு. தமிழகத்தில் மதசகிப்புத்தன்மை, சகோதரத்துவத்தை சிதைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. அவர்களை இனம்கண்டு தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும், மத நல்லிணக்கத்தை பேணிகாக்க வேண்டும்.
ஆட்சில் இருப்பதால் சிலர் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். வரும் புத்தாண்டில் நம் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டி, இந்தியாவின் அடுத்த பிரதமரை தமிழக மக்களே தீர்மானிப்பார்கள். இந்த கன்னியாகுமரி மாவட்டம் அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். இங்கிருந்து தான் அந்த மாற்றம் வரவேண்டும். இம்மாவட்டத்தில் தேசிய கட்சிகளுக்கே ஆதரவு என்று கூறுகிறார்கள். ஆனால், அந்த கட்சிகள் தமிழகத்தின் நலனில் நடுநிலையுடன் செயல்படுவதில்லை. தமிழக மக்களின் நலனுக்காக நாம் வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாநில கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று அதிரடியாக பேசினார்.