உடலிற்கு ஆரோக்கியம் தரும் வாழைப்பூ பிரியாணி!!

இயற்கை படைத்ததிலேயே ஒரு அற்புதமான படைப்பு அது வாழைமரம் தான். காரணம் வாழைப்பழத்திலிருந்து, காய், பூ, தண்டு, இலை என்று தலை முதல் அடிவரை பயன்படாத பொருளே இல்லை எனலாம். தற்பொழுது வாழைப்பூவை பயன்படுத்தி பிரியாணி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையானவை:
வாழைப்பூ – ஒன்று (சிறியது)
சீரகசம்பா அரிசி – அரை கிலோ
பட்டை ,கிராம்பு – 5
ஏலக்காய் – 2
பிரிஞ்சி இலை – ஒன்று
பெரிய வெங்காயம், தக்காளி – 3 நீளமாக நறுக்கியது
கீறிய பச்சைமிளகாய் – 3
இஞ்சி-பூண்டு விழுது – 5 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா ,கொத்தமல்லித்தழை இலை
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
நெய் – 4 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – ஒன்றில் பாதி
தயிர் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைக்கத் தேவையானவை:
சின்ன வெங்காயம் – 200 கிராம், முந்திரி – ௭, கசகசா – ஒன்றரை டீஸ்பூன், சோம்பு – ஒன்றரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன், புதினா – 2 டீஸ்பூன் ஆகியவற்றை பேஸ்டாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

செய்முறை :

சீரகசம்பா அரிசியை ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் வதக்கவும்.

இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து மேலும், 2 நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கி, தயிர், அரைத்த பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள்,, புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கி, வாழைப்பூ சேர்த்து வதக்கவும். இத்துடன் அரிசி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும்.

சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறிவிட்டு, எலுமிச்சைச் சாறு ஊற்றி மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பின்னர் பரிமாறவும்.

சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்!!