தூக்கியெறியப்பட்ட ஓ.பி.எஸ்.. கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்!

வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் பொருட்டு வேலூரில் அரசின் சார்பில் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 27 துறையின் செயல்பாடுகள் குறித்தும், அதில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்தும் விளக்கி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

வழக்கமாக ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அணிகள் இணைவுக்கு பிறகு இது போன்று நடக்கும் அரசு விழாக்களில் நுழைவு வாயிலின் ஒரு பக்கம் இ.பி.எஸ் படமும், மற்றொரு பக்கம் ஓ.பி.எஸ் படமும் வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் வேலூரில் நடந்த இந்த விழாவில் நுழைவு வாயில், அரங்கு உட்பட எதிலும் ஓ.பி.எஸ் படம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு திட்டங்களை விளக்கும் பகுதியில், அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அதிலும் ஓ.பி.எஸ் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், ‘எந்த விதத்தில் துணை முதல்வர் குறைந்து விட்டார்..? அவருக்குண்டான மரியாதையை கொடுக்க வேண்டும் அல்லவா..? ‘ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கடித்துக்கொண்டனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் தான் விழா ஏற்பாடுகள் முன்னெடுத்து செல்லப்பட்டதால், அவர் மீதும் ஒரு தரப்பினர் அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர்.

அரசின் சாதனைகளை பொதுமக்களிடத்தில் கொண்டு செல்லும் விழா என்று கூறப்பட்டாலும், பொருட்காட்சி தொடக்க விழாவிற்கு பொதுமக்களை விட கட்சியினரே அதிகமாக கலந்து கொண்டனர்.