மார்கழி மாதத்தில் பிள்ளையார் பிடித்து கோலம் போடுவது ஏன்?

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் வாசலில் கோலமிட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம்.

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் அதில் சாணத்தை பிள்ளையாராக பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப்பூவை, பரங்கிப் பூவை அழகுப்படவைப்பார்கள்.

அதன்பிறகு அதைச் சேகரித்து வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு வழிபடுவார்கள். இதனைச் சிறு வீட்டு பொங்கல் என அழைப்பர். பின்னர் சேகரித்த சாண உருண்டைகளை நீர் நிலைகளில் சேர்ப்பார்கள்.

மார்கழி மாதத்தில் வீட்டின் வாசலில் சாணம் பிடித்து வைப்பதற்கு ஒரு முக்கிய கதை உண்டு. பாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருஷத்திர யுத்தம் மார்கழி மாதத்தில் தான் நடந்தது. பாண்டவர்கள் சேனைகள் தங்கியிருந்த வீடுகளை அடையாளம் கண்டு கொள்வதற்காக வியாசர் வீட்டுவாசலில் சாணம் இட்டு பூ வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தாராம்.

அதை அடையாளமாக கொண்டு போர் நடக்கும் சமயத்தில் பாண்டவர்களுடைய சேனைகளின் வீடுகளை கௌரவர்கள் தாக்காமல் இருப்பதற்காக கண்ணபிரான் பாதுகாப்பு அளித்தார். அன்று முதல் இந்தப்பழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடுவதால், மழையினால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும்.