ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் ஒரே கோரிக்கையாக விளைநிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரங்களை கைவிட்டு சாலைவழியாக கேபிள் பதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, ”உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக இருக்கும் விவசாயிகளின் கோரிக்கை பற்றி நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். மத்திய அரசின் திட்டங்கள் விவசாயத்தை மேம்படுத்தவே உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் விவசாயத்திற்கு எதிராகவே இருப்பதாக கூறுவது தவறானது.
விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சொல்லி ஏமாற்று வேலை செய்து, இந்திய மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிப்பதில் காங்கிரஸ் கட்சியினர் கை தேர்ந்தவர்கள். தமிழகத்தில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அவை நிறுத்தப்பட்டது. உயர்மின் கோபுரங்கள் திட்டத்திற்கு விவசாயிகள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் அதும் தமிழகத்தில் இருக்காது” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.