நமது நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் அரேஞ்சுடு மேரேஜ்தான். இதில் பொண்ணும் பையனும் பேசிப் பழகிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. திருமணம் முடிந்த பின்னும் சில நாட்கள் உறவினர்கள் கூடவே இருப்பதால், அவர்களுக்கு பிரைவசி இருக்காது. மணமக்கள் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்வதற்கு சிறந்த இடம் தேனிலவு. புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றுமே தேனிலவில் எளிதாகச் சாத்தியப்படும்.
தேனிலவு என்றால் ஏதோ பணக்காரர்கள் மட்டுமே செல்லக்கூடியது என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மலை வாசஸ்தலங்களுக்கோ, வெளிநாடுகளுக்குச் செல்வது மட்டும்தான் தேனிலவு என புரிந்து வைத்திருப்பவர்களும் உள்ளனர். எந்தத் தொந்தரவும் இல்லாத, உறவினர்கள் இல்லாத – பாதுகாப்பான எந்த ஊருக்கும் தேனிலவு செல்லலாம். கணவன்-மனைவிக்கே உரிய உவப்பான நேரம் அப்போதுதான் கிடைக்கும்.
தேனிலவு செல்வதை சிலர் பேக்கேஜ் டூராக போவார்கள். ‘குறைந்த செலவில் நிறைய ஊர் செல்லலாமே’ என்ற நப்பாசையில் இப்படி செய்கிறார்கள். கோயில் தரிசனம் என்றால் அதிகாலை 5 மணிக்கே எழுப்பிவிட்டு விடுவார்கள் பேக்கேஜ் டூர் ஆட்கள். ஒரு நாளில் 3 ஊர்களுக்கு கூட்டிச் சென்றால், நேரம் முழுக்க பயணத்தில்தான் போகும். அதனால், ஒருபோதும் தேனிலவை பேக்கேஜ் டூராக மாற்றாதீர்கள்!
சிலர் ரொம்ப நல்ல பிள்ளையாக தேனிலவு செல்லும் போது குடும்பத்தினரையும் கூட்டிச்செல்வார்கள். இதுவும் தவறான அணுகு முறையே. தம்பதிக்குள் தகுந்த நேரத்தை உருவாக்கி, பேசி, பழகி போதுமான அளவில் தாம்பத்தியத்தில் ஈடுபட வழிவகுப்பதே தேனிலவு. அங்கு சென்றும் நேரத்தை வீணாக்காதீர்கள். தேனிலவு செல்லும் தம்பதிகள் சிலருக்கு ‘ஹனிமூன் சிஸ்டைடிஸ்’ எனும் பிரச்னை ஏற்படும். சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சலும், நீர்ச்சுருக்கு போன்ற வலியும் இருக்கும்.
அடிவயிற்றிலும் வலிக்கலாம். பெண்ணின் சிறுநீர்பையும், சிறுநீர் தாரையும் மிக அருகில் அமைந்துள்ளன. அடிக்கடி தாம்பத்தியம் வைத்துக் கொண்டு உறுப்புகளை சரியாகச் சுத்தம் செய்யாமல் இருக்கும்போது, அதில் ஏற்படும் கிருமித்தொற்றால் உருவாகும் அழற்சிதான் இது.
பயப்படத் தேவையில்லை. பிறப்புறுப்பு பகுதியை அடிக்கடி தண்ணீரில் கழுவி சுத்தமாக வைத்திருந்தாலே இந்தப் பிரச்னை ஏற்படாது. நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி பழச்சாறு அருந்தினாலும் இப்பிரச்னை வராது. தேனிலவை பல காலங்களுக்கு நினைத்து சந்தோஷப்படும் இனிமையான நிகழ்வாக தம்பதிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்.