இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பாண்ட் ஆகியோருக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டதால், டோனியை மீண்டும் அணியில் சேர்த்தோம் என்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, அதன் பின் நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மேற்கிந்திய தீவு மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் சேர்க்கப்படாமல் இருந்த டோனி, நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் அணியில் இடம் பிடித்தார்.
இதனால் டோனி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் டி20 விளையாடுவதால் இந்தத் தொடரோடு அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரோ? என்ற பயமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறுகையில், நாங்கள் முன்பே அறிவித்தது போல ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக டோனியை அணியில் இருந்து நீக்கினோம்.
அவர்களுக்கான போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டது, இதனால் டோனியை மீண்டும் அணியில் சேர்க்க இது தான் சரியான நேரம் என்பதற்காகவே மீண்டும் அணியில் எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.