தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதாக கூறி, இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அந்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுஜிதா. 25 வயதான இவர் நர்சிங் முடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சமூகவலைத்தளம் மூலம் காட்பாடி பகுதியை அடுத்து லத்தேரியைச் சேர்ந்த நாகேஷ் என்பவரின் மகன் மனோஜ்குமார் (26) அறிமுகமாகியுள்ளார்.
அப்போது மனோஜ் தான் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதாக கூறி அவரிடம் பேசியுள்ளார். இதையடுத்து இருவரும் போன் நம்பரை வாங்கிக் கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.
இவர்களின் இந்த நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த மனோஜ், சுஜிதாவை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின் அவரிடம் திருமண ஆசை காட்டி பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சுஜிதாவிடம் மனோஜ் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரித்த போது, மனோஜ் ஏற்கனவே திருமணம் ஆனவன், அவனுக்கு குழந்தை ஒன்று இருப்பதை அறித்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் தன்னை ஏமாற்றிய மனோஜ் மீது அந்த பெண் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தன்னை ஏமாற்றிய காதலன் மனோஜ்குமாரை கைது செய்யக்கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை ஏமாற்றிய காதலனை கைது செய்ய வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதிகாரிகளிடம் அவர் கெஞ்சினார்.
அப்போது அவர் விஷம் குடித்ததாக கூறப்பட்டதால், பொலிசார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது, அவர் விஷம் அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுஜிதாவிடம், புகார் பெறப்பட்டது.
காதலன் மனோஜ்குமார் தலைமறைவாக உள்ளதால், அவரின் தந்தை நாகேஷை பிடித்து வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.