விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் அயல்நாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்த போது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இது குறித்து விசாரித்ததில், சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஒப்பந்த ஊழியர் செய்த தவறினால் தவறு நிகழ்ந்ததாக விருதுநகர் மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் மனோகரன் கூறினார். கடந்த 30ம் தேதி வெளிநாடு செல்ல இருந்த நபர், ரத்த வங்கியில் சோதனை செய்தபோது உடல்நிலை சீராக இருப்பதாக அந்த ஊழியர் தெரிவித்ததால் தவறு நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் மருத்துவமனை தொழில்நுட்ப வல்லுநரான ஒப்பந்த ஊழியர் வளர்மதி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் 2 ஒப்பந்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் செலுத்தியதில் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் மக்களிடம் பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய விருதுநகர் மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குநர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.