சுமாா் 2.30 லட்சத்திற்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்த சுனாமி ஆழிப் பேரலையின் 14ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உலகத்தையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை தமிழகத்தையும் சூறையாடியது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 9.15 மணியளவில் 2 முறை சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியதில் சென்னை மற்றும் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வசித்து வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர்.
இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே அதிகாலை சுமாா் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சாிந்தன. ரிக்டா் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை நிலநடுக்கம் பதிவானது. ஆய்வாளா்கள் 10 நிமிடங்கள் வரை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தொிவித்தனா்.
சுனாமி தாக்கியதில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் போ் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் சென்னை, கடலூா், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமாி உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோா் உயிாிழந்தனா்.
14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட போது சுனாமி இந்திய கடலோரப் பகுதிகளை வந்தடைய 3 மணி நேரம் ஆனது. தற்போது உள்ள நவீன கருவிகள் அப்போது இருந்திருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பற்றியிருக்கலாம்.
கடலோர மாவட்டங்களில் என்றும் அழியாத துயரத்தை ஏற்படுத்திச் சென்ற சுனாமியின் தாக்குதலின் 14ம் ஆண்டு நினைவு தினம் இன்று 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மீண்டும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி உலகத்தையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.