இணையத்தில் வைரலான இளைஞனின் தற்கொலை முயற்சி.!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பட்டதாரி இளைஞர் ஒருவர், ”விவசாயி நேரடியாக தற்கொலை செய்துகொள்ளும் காட்சியை பாருங்கள்” என்ற தலைப்புடன் ஒரு காணொளி வைரலாக பரவியது. இதனை கண்ட தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நமது செய்துபுனல் செய்தியாளர்கள் செய்த விசாரணையில் அந்த காணொளியில் உள்ளவர், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்த இராஜேந்திரன் என்பவரின் மகன் இனியவன் என்பது தெரியவந்தது.

மேலும், படித்த பட்டதாரி இளைஞனான இவர் திமுகவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இனியவன் தங்களது பகுதி கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், எங்களை தமிழக முதல்வர், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு ”ஐயா எடப்பாடி ஐயா” என்ற தலைப்பில் கொட்டும் மழையில் பேட்டி கொடுத்து இருந்தார்.

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் 5 தனிப்படை போலீசார் அவரை தேடிவருவதாகவும் தெரிகிறது. இதனை அறிந்த இனியவன் கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், இனியவன் தனது முகநூலில் ஒரு காணொளி மூலம், ”எல்லாக்கும் வேதனையோடு ஒரு பதிவை போடுகிறேன். நான் பாய்சன் சாப்பிட்டுவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைவிட்டு பிரிந்துவிடுவேன். அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி. நாங்க என்னய்யா தப்பு செய்தோம். கஜா புயலில் எவ்வளவு கஷ்டப்பட்டோம். கூரை வீடு, மாடி வீடு வைத்திருந்த எல்லோரும் குளிரில் நின்றோம்.

காவல்துறை எங்கள் மீது பொய் வழக்கு போட்டு ரொம்ப கஷ்டப்படுத்துகிறார்கள். கஜா புயல் பற்றி டிவியில் வந்து பேட்டி எடுத்தார்கள். எடப்பாடி ஐயா என்று பேசினேன். அதற்க்கு என் மேல் வழக்கு, என் தந்தை மேல் வழக்கு போட்டு ஒரு கொலை குற்றவாளி போல் என்னை தேடுகின்றனர். எனக்கு நீதி கிடைக்கணும். எனது குடும்பத்திற்கு, என் ஊருக்கு நீதி கிடைக்கணும். எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இதுதான் என்னுடைய சாவின் கோரிக்கை” என்று ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இதனை பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா அவர்கள், அந்த இளைஞனை மீட்டு, தனது முகநூலில் ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த காணொளியில், ”தமிழக மக்களுக்கு வணக்கம், தம்பி இனியவன் தற்கொலை செய்து கொண்ட காணொளியை பார்த்து அதிர்ந்து போனேன், அவரை தற்போது மீட்டு வந்துள்ளேன், தம்பி இனியவன் பெரிதாக எந்த தவறும் செய்யவில்லை. தனது ஊர் மக்களுக்காக சாலை மறியல் செய்துள்ளார். அதற்காக அவரை கைது செய்ய போலீசார் 5 தனிப்படை அமைத்து தேடுவதாக கூறுகிறார்.

தவறு செய்தவர்கள் தான் தலைமறைவாக வேண்டும், தம்பி போன்றவர்கள் எதையும் எதிர்த்து துணிச்சலாக செயல்படவேண்டும். சட்டம் நமக்காகத்தான் எழுதப்பட்டது. நம் மேல் தவறு இல்லை எனில், அதனை எதிர்த்து போராட வேண்டும். எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்துகொள்ள கூடாது. தற்கொலை செய்து கொள்வதும் சட்டப்படி குற்றமே. தற்போது இனியவனை இன்று அல்லது நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளோம். அவர் மீது போடப்பட்ட வழக்குகளை நேரடியாக சந்திக்க உள்ளார். அனைவருக்கும் நன்றி” என்று அந்த காணொளி பதிவில் ராஜேஸ்வரி பிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.