கௌரவமான ஓய்வுக்குத் தயாராகும் ஜனாதிபதி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தற்போதைய ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்திசெய்துவிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக்கேட்பதற்கு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றுதீர்மானித்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறியதாக லங்கா இணையத்தள செய்திச்சேவையொன்று தெரிவித்திருக்கிறது.

விடுமுறையில் தற்போது குடும்பத்தினருடன்  தாய்லாந்து  சென்றிருக்கும் ஜனாதிபதி சிறிசேன அங்கு அவர்களுடன் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆராய்ந்ததாகவும் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கடுமையான கவலையை அவர் வெளிப்படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி கௌரவமான முறையில் ஓய்வுபெறுமுகமாக அவரது மக்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அவரது ஆலோசகர்களில் ஒருவரிடம் குடும்ப உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டதாகவும் அந்த செய்திச்சேவை கூறுகிறது.