மேல்மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் ஜனநாயக மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்துக்கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை ஆகிய காரணங்களுக்காக மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும், சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த, கட்சியின் உபதலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல்மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் 7 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்யத குற்றத்திற்காக சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.