புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவர் திருச்சி மாவட்டத்தில் தங்கி தனியார் ஆலையில் வேலைபார்த்து வந்தார். வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஊருக்கு சென்றுவந்துள்ளார்.
இந்த நிலையில் செல்வமணியின் மகள் கவிதாவுக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடுவதற்காக அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரின் அழைப்பினை ஏற்று அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் செல்வமணி நேற்று மகளின் பிறந்தநாள் விழாவிற்காக விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊரான கீழையூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் மாத்தூர் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, அரசு பேருந்து ஒன்று திடீரென செல்வமணி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.
பேருந்து மோதியதில் செல்வமணி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்துவந்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை கைது செய்தனர். பின்னர் செல்வமணியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மகள் பிறந்த நாள் அன்று செல்வமணி இறந்த சம்பவம் கீழையூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.