அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் ஐந்து வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக கட்டடத்தைக் கொள்வனவு செய்வதில் 32,0000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததுடன் தொடர்புபட்டதாக அவருக்கு எதிராக இரண்டு நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், பணச்சலவை தொடர்பான இரண்டு மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் குடிவரவுத் திணைக்களத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டு என மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரான ஜாலிய விக்ரமசூரிய 2008ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுக்கான ஸ்ரீலங்கா தூதுவராக 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.
“2012ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து 2014 நவம்பர் வரையான காலப் பகுதியில் பிரதிவாதியான ஜாலிய விக்ரமசூரிய புதிய தூதரகக் கட்டடத்தைக் கொள்வனவு செய்வதில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் மோசடி செய்திருப்பதுடன் மோசடியான செயற்பாடு பிரதிநிதித்துவம் மற்றும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்” என அமெரிக்காவின் கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தில் கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு இந்த மோசடிகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசுக்கு அறிவித்ததுடன், அவரை வெளிநாட்டு சேவையிலிருந்து மீள அழைத்துக்கொள்ளுமாறு கோரியிருந்தது.அப்போது ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ச அவரை மீள அழைத்துக் கொண்டபோதும் அவருக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் வழக்கும் தாக்கல் செய்யவில்லை.
அமெரிக்கத் தூதுவர் என்ற ரீதியில் அவர் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிப்பதற்கு ராஜபக்ச நிர்வாகம் இடமளித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.