விருத்தாசலம் மாவட்டம் சின்னகண்டியங்குப்பத்தில் வசித்து வருபவர் செல்லத்துரை. அவர் சிலம்பொலி என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் செல்லத்துரை, சிலம்பொலியை அப்பகுதியில் உள்ள செம்பையனார் கோவிலில் நண்பர்கள் மட்டும் சூழ்ந்திருக்க, இருவரது குடும்பத்தாருக்கும் தெரியாமல், திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் திருமணமான இரண்டு மணி நேரத்திலேயே, செல்லத்துரை திடீரென சிலம்பொலியின் தாலியை கழற்றிவிட்டு, அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து நாளடைவில் சிலம்பொலியுடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் 14 நாட்கள் பொறுமையாக இருந்த சிலம்பொலி, நேற்று தனது உறவினர்களுடன் செல்லதுரை வீட்டிற்கு தனது திருமண புகைப்படத்துடன் நியாயம் கேட்க சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரது வீடு பூட்டியிருந்ததால், தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்கும் வரை, இங்கிருந்து செல்ல மாட்டேன் எனக் கூறி, வீட்டின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் இதுகுறித்து சிலம்பொலி பேசுகையில், செல்லத்துரையும், நானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து, டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டோம்.இந்நிலையில் திருமணமான 2 மணி நேரத்தில் அவரது அம்மா, விஷம் குடித்துவிட்டதாக தகவல் வந்ததால், எனது தாலியை கழற்றிவிட்டு, இரண்டு நாட்களில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி என்னை எனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், அதன்பின் என்னிடம் பேசுவதையும் தவிர்த்து விட்டார். மேலும் இதுகுறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
பின்னர் மகளிர் போலீசார் , சிலம்பொலியை சமாதானப்படுத்தி அவரை கணவருடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.