பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, மகப்பேறு மருத்துவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தனி வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் அயல்நாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரித்த பொது இரண்டு வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்த போது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சாத்தூரில் ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
* பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, மகப்பேறு மருத்துவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* ஹெச்ஐவி வைரஸ், குழந்தையை பாதிக்காமல் இருக்க தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம், குழந்தைக்கு தொற்று ஏற்படாமல் காப்பாற்றிவிடுவோம் என நம்பிக்கை உள்ளது.
* பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகிறோம்.
* பிரசவம் ஆகும் வரை அந்தப் பெண் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும்.
*ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு மறுபரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.