ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. நாணயச்சுழற்சியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து இந்திய அணியின் சார்பில், மயங்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய ஹனுமா விஹாரி 8 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து வந்த புஜாராவுடன், மயங்க் அகர்வால் கைகோர்த்து அபாரமாக விளையாடி தனது முதல் அரைசதத்தை அடித்தார். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 123 ஆக இருந்தபோது 76 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி, புஜாராவுடன் இணைந்து சிறப்பாக விளையாடி வந்தனர்.நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது.
புஜாரா 68 ரன்களுடனும், விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் காலையில் தொடங்கியது. மிகவும் நிதானமாக விளையாடிய புஜாரா சதம் அடித்தார். இது அவரது 17-வது டெஸ்ட் சதம் ஆகும். தற்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 105 ரன்களுடனும் விராட் கோலி 82 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.