இலங்கைக்கு சுற்றுலா சென்றால் அங்கு ரசிப்பதற்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும், பலவகையான உணவுகளும் நாவினை சுண்டி இழுக்கும் ருசியுடன் செய்யப்பட்டிருக்கும்.
எனவே இலங்கைக்கு சுற்றுலா சென்றால் தப்பித்தவறி கூட இதனை மிஸ் செய்துவிடாதீர்கள்,
கொத்து ரொட்டி
இலங்கையில் மிகப்பிரபலமான உணவு. இலங்கையின் ரோட்டு ஓரக்கடைகளில் கூட இந்த கொத்து ரொட்டி விற்கப்படும்.காய்கறி, இறைச்சி, சோயா சோஸ், இஞ்சி மற்றும் பூண்டு போட்டு செய்யப்படுகிறது.
அந்திநேரங்களில், நீங்கள் ரோட்டு ஓரம் நடந்துசென்றால் இந்த கொத்து ரொட்டி விற்கப்படும்.அளவான தட்டில் வைத்து அதனுடன் ஸ்பூன் வைத்து தருவார்கள்.வாங்கி ருசிக்க மறந்துவிடாதீர்கள்.
பருப்பு கறி
சோறும் பருப்பு கறியும் இலங்கையின் பிரதான உணவாகும்.மைசூர் பருப்பில் தேங்காய் பால் விட்டு செய்யப்படும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் பொடி போட்டு செய்யப்படும் இந்த பருப்புடன், சூடான சோறு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
சிறிய ஹொட்டல்கள் முதல் பெரிய ஹொட்டல் என அனைத்திலும் நீங்கள் இந்த பருப்பு கறியை ருசிக்கலாம்.
பொலஸ் கறி (பலாகாய் கறி)
இது மிகவும் ருசியான உணவு ஆகும். பொலஸ் கறி, உப்பு, இஞ்சி, மஞ்சள்,வெங்காயம்,மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம், கொறக்காய் (கொடம்புளி)பூண்டு, கறுவாப்பட்டை, ஆகியன சேர்த்து தயாரிக்கப்படுகிறது.பொலஸ் கறி இறைச்சி கறியின் சுவைப் போல் இருக்கும்.
வட்டலாப்பம்
முட்டை, தேங்காய் பால், சீனி, முந்திரி, ஏலக்காய், நெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு உணவு.
முட்டை மற்றும் தேங்காய் பால் ஆகியவை இதில் அதிகமாக சேர்க்கப்படும்.பண்டிகை காலங்களில் இது செய்யப்படும்.
வல்லாரை கீரை சம்பல்
வல்லாரை கீரை, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சம்பல்.வல்லாரை கீரையை பச்சையாக இந்த சம்பலுக்கு யன்படுத்துவார்கள்.