திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ளது லிங்கவாடி. இந்த ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டுதான் தரம் உயர்த்தப்பட்டது.
இப்பகுதி மக்கள் இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் மேல்நிலைக் கல்விக்கு நத்தம் அல்லது மதுரைக்கு சென்று வருகிறார்கள்.
தற்போது இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். ஊராடசி ஒன்றியத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிதியில் கட்டப்பட்ட கழிப்பறைகள் சேதப்படுத்தப்பட்டன. குழந்தைகளுக்கு கூட இங்கு நல்ல கழிப்பறை இல்லை.
இந்நிலையில் 8 ஆம் வகுப்பு பயிலும் இளம் பெண்கள் இந்த பள்ளியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் தங்கள் வீடுகளுக்கு சென்று வரும் அவல நிலை உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தரப்படவில்லை.
முத்தம்மாள் என்ற திருமண மண்டபத்தில் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் நடைபெறுகிறது. திருமண முகூர்த்த நாளின் போது இந்த மண்டபத்தில் பள்ளி இயங்காது. அப்படிப்பட்ட நாள்களில் மாணவ, மாணவியர்களுக்கு இந்த பள்ளியின் நிழல் தராமரத்தின் அடியில் அமர வைத்து பாடம் நடத்துவார்கள்.
இந்த பள்ளியில் உயர்நிலைப்பள்ளிக்கான கூடுதல் பள்ளிக்கட்டடம் வேண்டும் என்று நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், தாசில்தார், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேதனை என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடிப்பு வேலையே நடைபெறுகிறது.
3 மாதங்களுக்கு முன்பு கூடுதல் பள்ளிக்கட்டடத்திற்காக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு நிலம் அளவீடு செய்தது. ஆனால் அடுத்தகட்ட பணிகள் தொடரவில்லை.
வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடமும் இக்கிராம மக்கள் மனுக் கொடுத்தும் விரைவான நடவடிக்கை இல்லை. சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனுக்கொடுத்தனர். மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஆலோசித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கழிப்பறையும், கூடுதல் கட்டட வசதியும் செய்து தரவில்லை என்றால் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.