தமிழகத்தில் மனைவியின் பெயரில் உள்ள சொத்தை அதே பெயரைக் கொண்ட மற்றொரு மனைவியின் மூலம் பத்திரப்பதிவு செய்த அதிமுக பிரமுகரின் செயல் அம்பலமாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுகவில் மணப்பாறை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார்.
இவருக்கும் மாற்றுத்திறனாளியான நிர்மலாதேவி என்பவருக்கும் கடந்த 1996-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
நிர்மலா தேவி அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு அனுஷ்கா என்ற மகள் உள்ளார்.
முதல் மனவி நிர்மலாதேவி இருக்கும் போதே, குரும்பட்டியைச் சேர்ந்த முதல் மனைவியின் பெயரைக் கொண்ட மற்றொரு பெண்ணை சந்திரசேகர் திருமணம் செய்துகொண்டார்.
இப்பெண் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். மாற்றுத்திறனாளி முதல் மனைவி மணப்பாறை கோவில்பட்டி சாலை வீட்டிலும், 2-வது மனைவி போடுவார்பட்டியிலும் வசித்து வருகின்றனர்.
முன்னதாக மணப்பாறை கோவிந்தசாமி தெருவில் உள்ள 2011 சதுரடி காலி வீட்டுமனையினை, முதல் மனைவி நிர்மலாதேவிக்கு சில வருடங்களுக்கு முன்பு சந்திரசேகர் தானமாக எழுதி கொடுத்தார்.
இதற்கிடையே ராஜீவ் நகரில் புதிதாக வீட்டுமனை வாங்கிய முதல் மனைவி நிர்மலாதேவி, தற்போது அங்கு வீடுகட்டி வசித்து வருகிறார்.
இந்நிலையில் கணவருக்கும், முதல் மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால், முதல் மனைவி நிர்மலாதேவியிடம், தான் தானமாக கொடுத்த காலி வீட்டுமனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு சந்திரசேகர் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் மறுத்துவிடவே, கடந்த நவம்பர் 30-ஆம் திகதி 2-வது மனைவி நிர்மலாதேவியை மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்ற சந்திரசேகர், இவர் தான் என்னுடைய முதல் மனைவி நிர்மலாதேவி என்று கூறி போலி கையெழுத்து போட்டு தானமாக கொடுத்த இடத்தை தன் பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார்.
இதையறிந்த முதல் மனைவி நிர்மலாதேவி, கணவர் சந்திரசேகர் மற்றும் 2-வது மனைவி நிர்மலாதேவி அடுத்து சாட்சி கையொப்பம் இட்ட இருவர் மீதும் ஆன்லைன் மூலம் பொலிசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி சென்னை பதிவுத்துறை ஐ.ஜி, மாவட்ட பதிவாளர் மற்றும் மணப்பாறை சார்பதிவாளரிடமும் புகார் அளித்துள்ளார்.
இதனால் மணப்பாறை சார்பதிவாளர், சந்திரசேகரையும் மற்றும் அவரது 2வது மனைவியையும் அலுவலகம் அழைத்து, புதிய பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.