துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி!

உடல் நலக்குறைவு காரணமாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மற்ற கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி உடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

அப்போது பேசிய முதல்வர், அண்மையில் தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி. ஐந்து கட்சிகளில் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய ஆரம்ப நிலை கட்சிக்கே அவர் சென்றுவிட்டார். அவர் ஒரு அரசியல் வியாபாரி.

அ.தி.மு.க-வில் இருந்து அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்திருக்கும் இந்த நிகழ்வு அ.தி.மு.க என்ற குடும்பத்தின் பாசப் பிணைப்பை காட்டுகிறது. தொண்டர்களின் இயக்கமாக திகழும் அ.தி.மு.க-வில் இருப்பவர்களுக்கு என்றுமே ஒரு மரியாதை உண்டு என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சரொரு பங்கேற்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நேற்று புறப்பட்டு விமானம் மூலம் மாலை 5 மணியளவில் கோயம்புத்தூர் சென்றடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், சொந்த விஷயமாக கோவைக்கு வந்துள்ளதாக கூறினார்.

அதை தொடர்ந்து காரில் சென்ற அவர், கோயம்புத்தூர் கணபதி காந்திமாநகர் பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-க்கு பல நாட்களாக முதுகுவலி இருந்துவருவதாகவும், அதற்கு இயற்கை முறையில் சிகிச்சை பெற கோயம்புத்தூரில் ஐந்து நாட்கள் தங்கி ஆயுர்வேத சிகிச்சைகள் பெறுவார் என தகவல்கள் கிடைத்துள்ளது