மருத்துவமனையில் உள்ள க.அன்பழகனின் உடல்நிலை குறித்து, மு.க.ஸ்டாலின்!

தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வயதுமுதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே 97 வயதான அன்பழகன் கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இவர் கடைசியாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார். அனால் அந்த விழாவிலும் அவரால் முழுமையாக இருக்கமுடியாத காரணத்தால் சற்று நேரத்திலேயே வீடு திரும்பினார்.

இந்தநிலையில், இன்று மாலை க.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு, குழாய் மூலம் சளி வெளியே எடுக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி மற்றும் பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க-வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த பின் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் பேசினார். அவர் கூறுகையில், நெஞ்சில் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தற்போது நலமாக உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என கூறினார்.