இந்திய வீரர்களையும் இந்திய இரசிகர்களையும் இனரீதியில் கேலி செய்த இரசிகர்களை அதிகாரிகள் மெல்பேர்ன் மைதானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இந்திய அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இடம்பெறும் மெல்பேர்ன் மைதானத்தின் பே 13 பிரிவிலிருந்த இரசிகர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டனர்.
டெஸ்ட் போட்டியின் முதல் இரு நாட்களும் இவர்கள் இனரீதியில் கேலி செய்யும் கோசங்களை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக உங்கள் விசாவை காண்பியுங்கள் என கோசம் எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் குறிப்பிட்ட பகுதியிலிருந்து இரசிகர்கள் முற்றாக வெளியேற்றப்படுவார்கள் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது
இதன் பின்னர் இரசிகர்களை கண்காணித்த அதிகாரிகள் அவர்களில் பிரச்சினைக்குரியவர்களை வெளியேற்றியுள்ளனர்.
எங்கள் போட்டிகளின் போது இனஅடிப்படையில் நிந்திப்பதை கேலி செய்வதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வீரர்களிற்கு எதிராக இரசிகர்களிற்கு எதிராக எவருக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரசிகர்கள் இது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா பொலிஸாரும் மெல்பேர்ன் மைதான பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இரசிகர்களின் ஒரு பகுதியினரின் நடவடிக்கைகளை இன்று உற்று அவதானித்து பலரை வெளியேற்றியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.