கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் விழா பாகல்கோட்டையில் நடத்தப்பட்டது. இதில் கர்நாடக முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கினார். அப்போது அவர் கூறியவை,
விவசாயிகளை ஏமாற்றுவதாக பா.ஜ.க சொல்கிறது. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய திடமான முடிவை எடுத்துள்ளேன். விவசாயிகளை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். என்னை நம்புங்கள். எனது மகன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், விவசாய கடனை தள்ளுபடி செய்வேன்.
எங்களுக்கு பலத்தை கொடுங்கள். கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நீங்கள் பயப்பட வேண்டாம். விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் நான் போக மாட்டேன். கடன் தள்ளுபடிக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
விவசாய கடன் தள்ளுபடியால் 44 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். கடன் தள்ளுபடிக்கு நிதி பற்றாக்குறை எதுவும் இல்லை. தேசிய வங்கி விவசாய கடனையும் தள்ளுபடி செய்துள்ளேன். தேசிய வங்கிகளில் கடனை 4 தவணைகளில் திரும்ப செலுத்துவோம். வருகிற பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறும் என்று கூறினார்.