கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் ஏற்றப்பட்ட எச்.ஐ.வி. பாசிட்டிவ் ரத்தம்…! கண்டு கொள்ளாத அமைச்சரும், அரசு நிர்வாகமும்…!

விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு, எச்.ஐ.வி. பாசிட்டிவ் ரத்தம் ரத்தம் ஏற்பட்டு, அது தற்போது, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், சென்னையைச் சேர்ந்த, கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும், எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம் ஏற்றப் பட்டுள்ள செய்தி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

சென்னை மாங்காடு பகுதியில் வசித்து வரும் சிவாவின் மனைவி சுதா (வயது 27) இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். மாங்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். அவரது உடலில் ரத்தம் குறைவாக உள்ளதால், அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

அங்கு, அவருக்கு எச்.ஐ.வி. பாசிட்டிவ் ரத்தம் ஏற்றப் பட்டுள்ளது. இதன் பிறகு, அங்குள்ள மருத்துவர்கள் சுதாவைப் பரிசோதித்த போது, சுதாவின் உடலில், எச்.ஐ.வி. பாசிட்டிவ் ரத்தம் ஏற்றப்பட்டது தெரிய வந்தது. ஆனால், இந்த விஷயத்தை வெளியே தெரியாமல், அரசு டாக்டர்கள் மறைத்து, எச்.ஐ.வி. நோய் சிகிச்சைக்கான மருந்துகளை அளித்துள்ளனர்.

இது பற்றி, சுதா, அரசு டாக்டர்களிடம் கேட்ட போது, அலட்சியமாகப் பதில் கூறி உள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த சுதா, தனியார் லேப் ஒன்றில் சோதனை செய்த போது தான், அவரது உடலில், எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தெரிந்து, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து, சுதா, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால், இதை அவர்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

தற்போது, சுதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பதால், இவரை உறவினர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனால், வாழ்வதா?, குழந்தையுடன் சாவதா? என்று குழம்பி இருந்த போது, சாத்துார் விவகாரம் தெரிய வந்த பின், இது குறித்து, ஊடகங்களின் வாயிலாக தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்துள்ளார்.

இதனால், தற்போது, இந்த விவகாரம், மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது, சுதாவிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.