சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுவதோடு, ஒற்றையாட்சியும் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீ்ண்டும் உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார்.
சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மத பீடங்களான கண்டி அஸ்கிரி மற்றும் மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை நேரில் சந்தித்து இந்த உத்தரவாதங்களை தெரியப்படுத்தியுள்ள சிறிலங்கா பிரதமர், இவற்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் டிசெம்பர் 16 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, டிசெம்பர் 28 ஆம் திகதியான இன்றைய தினம் சிங்கள பௌத்த மக்களின் புனிதத் தளமான கண்டி சிறி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான நியம் பீடத்தின் அஸ்கிரி பிரிவிற்கு சென்ற சிறிலங்கா பிரதமர், வரக்காகொட சிறி ஞானரத்ன மகாநாயக்கரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
பிரதமர் ரணிலுடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர்.இதனையடுத்து மல்வது பீட மகாநாயக்க தேரர் திப்படுவாவே சிறி சுமங்கல தேரரை சந்தித்த சிறிலங்கா பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் மூத்த அமைச்சர்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
இந்த சந்திப்புக்களின் இறுதியில், இன்றைய தினம் மகாநாயக்கத் தேரர்களை அவசரமாக சந்தித்ததற்கான காரணத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார்.
தலதா மாளிகைக்கு சென்று தலதா பெருமானை வணங்கி ஆசீரிவாதம்பெற்றுக்கொண்ட நிலையில் அஸ்கிரி, மல்லவது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களையும் சந்தித்திருந்தேன். நாட்டின் அரசியல் சாசனத்தையும், மக்களின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக மகாநாயக்கத் தேரர்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டேன்.
நிலையான அரசாங்கமொன்றை கட்டியெழப்புவதற்கு அரச கட்டமைப்புக்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். அதேபோல் எமது செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வோம் என்பதையும் மகாநாயக்கத் தேரர்கள் இருவருக்கும் தெரியப்படுத்தினேன். கிராமங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து அபிவிருத்தியின் பயனை பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிக்க விழ்ப்பை அடுத்து முடங்கிப்போயுள்ள புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்திய சிறிலங்கா பிரதமர் ரணில், இதன்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையும், ஒற்றையாட்சி முறைமையும் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த விடையங்களில் தனது இந்த உறுதியான நிலைப்பாட்டை மகாநாயக்கத் தேரர்கள் இருவருக்கும் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் ரணில் கூறியதுடன், இதற்கு தமிழ் தேசியக் கூடடமைப்பு உள்ளிட்ட அனைத:து எதிர்கட்சிகளும் ஏற்கனவே முழுமையான இணக்கப்பாட்டை தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசியல் சானத்தை மறுசீரமைக்கும் போதும், அதேவேளை புதிய திருத்தங்களை மேற்கொள்ளும் போதும் தற்போது நடைமுறையிலுள்ள எமது அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பிரிவான பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள சரத்தில் ஒரு எழுத்தையேனும் மாற்றுவதில்லை என்று நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் நாம் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றோம். அதேபோல் நாம் ஒற்றையாட்சியை பாதுகாப்போம். ஒற்றையாட்சி முறைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். இந்த இரண்டு விடையங்களையும் மகாநாயக்கத் தேரர்களுக்கு அறிவித்தேன்”.
சில நாட்களுக்கு முன்னர் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிராக கடு் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கும் அறிவுறுத்தினோம். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய கடும்போக்காளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். இதனிடையே இந்து கோவிலொன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக முழமையான சடட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம். இதன்போது எந்தவொரு சலுகையும் வழங்கக் கூடாது என்றும் பொலிசாரை அறிவுறுத்தியுள்ளோம். அதேவேளை சேதமாக்கப்பட்ட கோவிலுக்கும், புத்தர் சிலைகளையும் புனரமைப்பதற்காக அரசாங்கம் நிதி உதவி வழங்கும்”.
இந்த சந்திப்புக்களின் இறுதியில் கண்டி மல்வது மகா விகாரையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளிலும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்தனர்.